கோவிட் -19 இன் போது உங்கள் மன நலத்தை ஆரோக்கியமாக வைத்திருங்கள்
அன்பிற்குரிய மலேசியர்களே,
நமது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகின்றன. இக்காலகட்டம் நம்மில் பெரும்பாலோருக்குக் கடினமாக இருந்து வருவதை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களது அர்பணிப்புக்கு எங்களின் நன்றியும் பாராட்டுகளும். இந்தச் சூழ்நிலையில் அதீதமான உணர்வுகள் வெளிப்படுவது இயல்பு. எனவே, உங்கள் மனநலத்தைப் பேண, நீங்கள் செய்யவேண்டியவை:
உங்கள் எண்ணங்களைச் சீரமையுங்கள்.
கட்டுபடுத்தப்பட்ட சூழலில் இருப்பதாக எண்ணாமல், நீங்கள் செய்ய விரும்பும் செயல்களையும் நேரமின்மையால் விடுப்பட்ட விஷயங்களையும் நிறைவேற்றக் கிடைத்த வாய்ப்பாக மாற்றுங்கள். இந்த சமயத்தில் அனிச்சல் (கேக்) தயாரித்தல், நிரலாக்கம் (ப்ரோகிரம்மிங்) போன்ற புதுத் திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
அன்புக்குரியவர்களை அணுகுங்கள்.
நாம் உடல்ரீதியாக தனித்திருந்தாலும் நாம் அன்பு செலுத்துவோரிடம் அணுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பல வழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புலனம் (வாட்ஸாப்), ஃபேஸ்டைம், ஜூம் மற்றும் காயலை (ஸ்கைப்) போன்ற செயலிகளைப் பயன்படுத்தி தொடர்புக் கொள்ளலாம்.
தேவையற்ற நேரங்களில் கைப்பேசியை முடக்கி வையுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்தான். இருப்பினும், கோவிட்-19 பற்றி பல தரப்புகளின் செய்திகளைத் தெரிந்துக் கொள்வது ஒருவகை
அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே, தேவைபடாத வேளையில், உங்கள்
கைப்பேசியை முடக்கி வைத்து, சகஜமாக இருப்பது நல்லது.
புதிய பணி நிரலை உருவாக்குங்கள்.
தூங்குவதற்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும் நேரத்தைச் செலவிட ஆசையாக இருந்தாலும், உங்கள் அன்றாட நடவடிக்கையில் ஓர் ஒழுங்கைக் கொண்டிருப்பது நிலைத்தன்மையை உருவாக்கும். உதவிக்குறிப்பு: நீங்கள் விரும்பும் ஒரு செயலை அன்றாட பணி நிரலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மற்றவர்களின் நலனைப் பேணுங்கள்.
மற்றவர்களுக்கும் சமூகத்திற்கும் செய்யக் கூடிய உங்களால் இயன்ற சேவைகளைச் சிந்தியுங்கள். நமது முன்னிலை பணியாளர்களுக்குத் தேவையான பொருட்களை ஒன்றிணைந்து திரட்டுவது, கடும் நடவடிக்கைக் கட்டுப்பாடு உத்தரவால் வீட்டை விட்டு வெளியேற இயலாதவர்கள், வறியவர்கள் போன்றவர்களுக்கு உதவுதல், மற்றும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்குச் சமைத்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால் நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உங்கள் பதற்றமும் தணியும்.
சுகாதாரத் தொழில் நிபுணர்களின் உதவியை நாடுங்கள்.
உங்களின் மனநலனைச் சமாளிக்க இயலாவிடில், மனநல நிபுணர்களின் ஆலோசனையை நாடலாம். இதனை அவமானமாகக் கருதவேண்டாம். இத்தகைய உதவிக்காக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தொலைபேசி சேவையைத் தோற்றுவித்துள்ளது. இந்த எண்களின் வாயிலாக தாலியான் காசே 15999 அல்லது புலன எண்களுக்கு 019-2615999, 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்பு கொள்ளலாம்.
நினைவில் கொள்ளுங்கள்: இதை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடியும்
நாட்டுக்காகச் சேவை செய்வோம்
மலேசிய சுகாதாரக் கூட்டமைப்பு






